தமிழக அரசியல் கட்சிகளுக்கு மனு நீதி அறக்கட்டளையின் தலைவர் மனு நீதி மாணிக்கம்
விடுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்:
தமிழகத்தில் வருங்காலத்தில் நல்லாட்சி என்பது உறுதியாகிவிட்டது. கரணம், கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களில் 3 கோடி வாக்காளர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள். அதேபோல் 4.10 கோடி வாக்காளர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே நல்லாட்சியை விரும்புகிறார்கள் என்பதில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஐயம் இருக்க முடியாது.
ஆகவே இனி வரும் காலங்களில் நமக்கு நல்லாட்சி கொடுக்க தகுதியுள்ள ஒரு வேட்பாளரை தான் நீங்கள் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்கவைக்க வேண்டும் என்பது இளைஞர்கள் சார்பில் மனு நீதி அறக்கட்டளை, அரசியல் கட்சிகளுக்கு வைக்கும் வேண்டுகோளாகும். இதில் தவறினால் என்ன நேரும் என்பதை நீங்கள் உணர வேண்டும் அதற்காகத்தான் இந்த பதிவு.
மக்கள் நல்லவர்களை தேடிகொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு அரசியல் கட்சியாவது நல்ல வேட்பாளர்களை, குறிப்பாக இளைஞர்களை தேர்தலில் நிற்க வைக்க மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டுள்ளார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆர்வத்தை நீங்களே அழித்துக்கொள்ள வேண்டாம். உங்கள் கட்சி பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டுமா?
கட்டாயம் நீங்கள் நல்ல தகுதியுள்ள நல்லாட்சி கொடுக்க வல்லமை படைத்த உறுதியான ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்து நிற்கவைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதை அறியவேண்டும். நல்லவர்கள் யாருமே அரசியல் களத்தில் இல்லையென்றால் மக்கள் வாக்களிக்கவே செல்லமாட்டார்கள் என்பதையும் இங்கு எடுத்து கூற விரும்புகிறேன்.
கடந்த காலத்தில் NOTA (None Of The Above ) என்று குறிப்பிடப்படும் யாருக்குமே அளிக்கப்படாத வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நீங்கள் நடைமுறையிலேயே காண நேர்ந்தது. இந்த சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க சிறந்த தகுதியுடைய வேட்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நிற்க வைக்க வேண்டும் தவறினால் தோல்வி உங்களை தழுவுவது நிச்சயம் என்பதையும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் வேறு வழியின்றி வாக்களிக்கிறார்கள் என்றால், இருப்பதில் நல்லவர்கள் யார் என தேர்வு செய்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
நிற்கும் வேட்பாளர்களை ஆராய்ந்து நல்லவர்களை அடையாளம் காட்ட பல அமைப்புகள் தயார் நிலையில் உள்ளதை காண்கிறேன். இனி வரும் தேர்தல்கள் பண பலத்தை வைத்து வெற்றி கனவை காண்க முடியாது. சோசியல் மீடியா தலைகீழாக புரட்டி போட உள்ளது.
ஆகவே, பணத்தை செலவு செய்து தெருவுக்கு வர வேண்டாம் என்று வேட்பாளர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
உலகத்தில், தமிழகம், ஒரு மாபெரும் கலாச்சாரத்தை கொண்ட ஒரு பகுதி. உலகிலேயே சிறந்த ஒரு பகுதி. தமிழ் மொழி உலகிலேயே பழமை வாய்ந்த பல இலக்கியங்களில் முதன்மை வகிக்கும் மொழி. பல ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ள பகுதி .
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே மனுநீதி சோழன் குலசேகர பாண்டியன்,சூரியவர்மன் போன்ற மாபெரும் அரசர்கள் நல்லாட்சிக்கு வித்திட்டவர்கள். அந்த அரசர்களின் பரம்பரையில் வந்த நாம் நல்ல ஒரு நீதி மானை அரசநாக தேர்ந்தெடுப்பதில் தெளிவாகவும்
உறுதியாகவும் இன்றைய இளைஞர்கள் உள்ளார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இப்படி நல்லாட்சியை நாம் நிறுவிவிட்டால் உலகிலேயே ஒரு சிறந்த இடமாக நம் தமிழகம் உருவாகிவிடும். தமிழகத்தால் இந்திய நாட்டிற்கே பெரும் பெருமிதம் ஏற்படும். நல்ல அரசன், நமது விவசாயிகள் தங்களது சொந்த காலில் நின்று அரசனுக்கே உணவளிப்பவன் என்ற பெருமிதத்தோடு வாழவைப்பான். அவ்வாறு விவசாயிகள் வாழ்ந்தால் தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்.
நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்து ஒரு மாணவன் படித்து முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்பு அல்லது தொழில் தொடங்கும் உத்திகள் கல்வியிலேயே புகுத்தி கற்பிக்க பட வேண்டும். ஏன் இது அமெரிக்காவில் மட்டும் தான் நடக்க வேண்டுமா?
அமெரிக்காவிலுள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் நமது இந்திய மக்கள் தான் மானவர்களாகவும், பேராசிரியர்களாகவும், கல்லூரி முதல்வர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்களை இங்கே அழைத்து வந்து இந்திய கல்வி தரத்தை உயர்த்த நமக்கு தேவையானது ஒன்றே ஒன்றுதான் .
ஒரு நல்ல அரசன். அந்த அரசனை தேர்ந்தெடுப்பது நமது கடமை என்றும் அதன் அவசியம் குறித்தும் இன்றைய இளைஞர்கள் சிந்திக்க துவங்கிவிட்டார்கள் என்பதை தாங்கள் உணரவேண்டும். இதை மனதில் கொண்டு எனது கருத்தினை புறக்கணிக்காமல் நீங்கள் நல்லவர்களை மட்டுமே வேட்பாளர்களாக களத்தில் இறக்க வேண்டும்.
எங்களுக்கு எந்த கட்சி வெற்றிபெறுகிறது என்பது நோக்கமல்ல மாறாக நல்லாட்சி ஒன்றே நோக்கம். வாருங்கள் அரசியல் கட்சி நண்பர்களே நாம் கட்டாயம் நல்லாட்சியை நோக்கி செல்வோம்.
Manu Neethi Manickam
https://www.facebook.com/ManuNeethiFoundation/